
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த 2ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்த மசோதா மீதான அனல் பறக்கும் விவாதம் நடந்த பின்பு பெரும்பான்மை வாக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து, வக்ஃப் வாரிய புதிய சட்டம் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. அதே சமயன், இந்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (07-04-25) தொடங்கியது. அப்போது, வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்து நோட்டீஸ் அளித்தன. ஆனால், இந்த மசோதா தொடர்பாக வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து விவாதிக்க முடியாது எனக் கூறி சபாநாயகர் அந்த தீர்மானத்தை ஏற்க மறுத்துவிட்டார். சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்த உறுப்பினர்கள், மசோதா நகல்களை கிழித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபாநாயகர் அவையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் இன்று (08-04-25) கூடியது. அப்போது, சர்ச்சைக்குரிய வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி மீண்டும் கோரிக்கை வைத்தது. இதனால் ஆளும் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கூச்சலிட ஆரம்பித்தனர். இதனால், சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இதில், சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்பிய மக்கள் ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏவாஹீத் பாரா சபையிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து, சபாநாயகர் கூட்டத்தை மதியம் 1 மணி வரை ஒத்திவைத்தார்.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி கூறியதாவது, “வக்ஃபு பிரச்சினை நம்பிக்கை சார்ந்த விஷயங்களை விட மேலானது. இது இந்தியாவில் உள்ள 24 கோடி முஸ்லிம்களின் உரிமைகள், நம்பிக்கைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே மாநிலமான ஜம்மு & காஷ்மீர், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப எழுந்து அதன் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்
மக்களின் குரல் கேட்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். முதலமைச்சர், சட்டமன்றம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் அரசாங்கம் அரசியல் உறுதியைக் காட்ட வேண்டும் என்றும், அதன் மக்களின் உரிமைகள் மீதான எந்தவொரு அத்துமீறலுக்கு எதிராகவும் உறுதியாக நிற்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.