
தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு 18.09.2021 அன்று அனுப்பப்பட்டது. இருப்பினும் ஆளுநர் 5 மாத காலத்திற்குப் பிறகு, இந்த சட்ட மசோதாவினை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்குத் திருப்பி அனுப்பினார். அதன் பின்னர் 08.02.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் இந்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பின்னர் இந்த மசோதா, ஆளுநரால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு, ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்து வந்தது. இந்த மசோதா தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய உயர்கல்வித் துறை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் கோரிய அனைத்து விளக்கங்களும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்குத் தமிழ்நாடு அரசு வழங்கியிருந்தது. இந்நிலையில் இந்த மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருந்தது.
இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “மத்திய அரசு நீட் விலக்குச் சட்டத்திற்கு ஒப்புதலை மறுத்துள்ளது என்ற வருந்தத்தக்கச் செய்தியை இந்தப் பேரவையில் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதுதொடர்பாக அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களிடமும் ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் வரும் 9ஆம் தேதி (09.04.2025) அன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடத்தப்படவுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நீட் தேர்வு குறித்து நாளை (09.04.2025) நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்க உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025இல் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் நடக்க இருப்பதால், மக்களைச் சந்திக்க வேண்டிய நிலையில், நான்கு ஆண்டுகள் ஆகியும் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்காததால் தி.மு.க. மீது மக்களுக்கு எழுந்துள்ள கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் சரிசெய்வதற்காக நாளை சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தால் எவ்விதத் தீர்வும் ஏற்படப் போவதில்லை. இது ஒரு நாடகம். எனவே, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அழைத்துள்ள அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது” எனத் தெரிவித்துள்ளார்.