
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று (07.04.2025) காலை 6 மணி அளவில் சோதனையைத் தொடங்கினர். மேலும் அவரது வங்கிக் கணக்கில் அதிக பரிவர்த்தனை காணப்பட்டதால், அதிகாரிகள் இந்த சோதனையைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்பட்டது. அந்த வகையில் சென்னையில் உள்ள அடையாறு, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சி.ஐ.டி. காலனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
மேலும் கே.என். ரவிச்சந்திரனுக்கு சொந்தமான கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள கட்டுமான நிறுவனத்திலும், அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர். அதேபோல் அமைச்சர் கே.என். நேருவின் மகனும், பெரம்பலூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான அருண் நேருவுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இத்தகைய சூழலில் தான் திருச்சி தில்லை நகரில் இரு இடங்களில் அமைந்துள்ள அமைச்சர் கே.என். நேருவின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இதற்கிடையே அமைச்சர் கே.என். நேருவின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை நேற்று மாலை நிறைவடைந்தது. காலை 8 மணி முதல் மாலை வரை என சுமார் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை அதன் பின்னர் முடிவுக்கு வந்தது. இந்த சோதனையில் முடிவில் அமைச்சர் கே.என். நேருவின் வீட்டில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதே சமயம் கே.என். ரவிச்சந்திரன் வீடுகளில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சென்னை ஆர்.ஏ. புரத்தில் இருந்த கே.என். ரவிச்சந்திரனை (அவரது இல்லத்தில் இருந்து) அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (08.04.2025) மாலை 4 மணியளவில் காரில் அழைத்துச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக்காக கே.என். ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கே.என். ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.