இந்திய வெளியுறவு துறை அமைச்சராக பதவியேற்ற சுப்ரமணியம் ஜெய்சங்கர், குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து டெல்லியில் நேற்று நடைபெற்ற "பாஸ்போர்ட் சேவா திவாஸ்" விழாவில் கலந்துக்கொண்டு விருதுகளை வழங்கினார். மத்திய வெளியுறவு துறை அமைச்சராக பதவியேற்று முதன் முறையாக நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது விழாவில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர் பாஸ்போர்ட்டுகளில் அதிநவீன புதிய வசதிகளை இணைக்க மத்திய அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் படி பாஸ்போர்ட்டில் "சிப்" ஒன்றை பொருத்த திட்டமிட்டுள்ளோம். விரைவில் இந்த சிப் பொருத்திய புதிய ‘இ-பாஸ்போர்ட்’ (ELECTRONIC PASSPORT) நடைமுறைக்கு வரும். மேலும் ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க உறுதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். தற்போது ஆண்டிற்கு ஒரு கோடி பாஸ்போர்ட்டுகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, குறிப்பிட்ட இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் விரைவில் தொடங்கும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஸ்போர்ட்டுகளுக்கான மத்திய அரசின் சேவை மிகப்பெரிய மாற்றத்தினை கொண்டு வந்தது. நாட்டிலேயே சிறந்த பாஸ்போர்ட் சேவை மையமாக ஜலந்தர் மையம் விருது பெற்றது. அந்த பட்டியலில் கொச்சின் பாஸ்போர்ட் சேவை மையம் இரண்டாமிடத்தையும், கோயம்புத்தூர் பாஸ்போர்ட் சேவை மையம் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளதாக தெரிவித்தார். பாஸ்போர்ட் வழங்கும் சேவையை மேலும் எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருவதாக கூறினார்.