12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்ததற்காக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் சிங்கப்பூர் காவலரான ஏ.ஆர்.அருண்பிரசாந்துக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருக்கிறது சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றம்.
தண்டனை வழங்கப்பட்டதற்கான குற்றங்களைப் பார்ப்போம்!
25 வயதே ஆன அருண்பிரசாந்தின் செல்போனில் சுமார் 700 பெண்களின் ஆபாச போட்டோக்கள் இருந்திருக்கின்றன. அதுபோன்ற புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுப்பதற்காக, சிறுமிகளைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்திருக்கிறார். மேலும், தன்னுடைய வீட்டிலோ அல்லது ஹோட்டலிலோ சந்திப்பதற்கு அழுத்தம் தந்திருக்கிறார்.
இரு சிறுமிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக அவனே குற்றத்தை ஒத்துக்கொண்ட நிலையில், மேலும் மூன்று இளம் பெண்கள், அறியப்படாத பல பெண்கள் என, 21 குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
சிறுமி ஒருவருக்கு ஆபாச தகவல்களை அனுப்பியபோது, ‘நான் ஒரு போலீஸ்’ என்று மிரட்டியிருக்கிறான் அருண்பிரசாந்த். வாட்ஸ்-ஆப் மூலமாகவும் சிறுமிகளைத் தொடர்ந்து தொந்தரவு செய்திருக்கிறான். அருணின் வாட்ஸ்-ஆப் தொடர்பை ‘பிளாக்’ செய்திருக்கிறாள். அந்த 14 வயது சிறுமி. அவனோ விடவில்லை. இன்ஸ்டாகிராம் மூலமாகவும், ஆபாச தகவல்களை அனுப்பினான். ஒருகட்டத்தில், அவளைத் தன் வீட்டுக்குள் அழைத்து வந்து ‘கொடுமை’ செய்திருக்கிறான். வீட்டை விட்டு வெளியில் வந்த அவள் காவல்துறையிடம் புகார் அளித்தாள். மறுநாள் கைதானான் அருண்பிரசாந்த்.
விசாரணையின்போது மாவட்ட நீதிபதி கெஸ்லர் சோ அருண்பிராசாந்திடம் “நீங்கள் ஐந்து இளம் சிறுமிகளுக்குக் கடுமையான தீங்கு விளைவித்ததை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.” என்றிருக்கிறார். அருண்பிரசாந்தின் வழக்கறிஞர்களோ “எனது கட்சிக்காரர் குற்றவாளி ஆகியிருப்பது இதுவே முதல்முறை. அவருக்கு 20 மாதங்கள் சிறை தண்டனை வழங்கினால் போதும்.” என்று கேட்டுக்கொண்டனர். ஆனாலும், அவனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது சிங்கப்பூர் நீதிமன்றம்.
உலகெங்கிலும் இதுபோன்ற குற்றங்கள் நடந்து வருகின்றனவே! தண்டனைகள் கடுமையாக இருந்தாலும் வக்கிரமனம் படைத்தோர் திருந்தியபாடில்லையே!