மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பாஜக வின் பிரச்சார யுக்தியை அகிலேஷ் யாதவ் சாடியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டரில் கருத்து கூறியுள்ள அகிலேஷ் யாதவ், "பாஜகவின் பிரச்சாரக் கூட்டங்களில் பெரும்பாலும் எதிர்க்கட்சியினரை குறைகூறியே ஏன் பேசுகின்றனர்? கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் சாதித்ததாக கூற அவர்களிடம் எதுவும் இல்லையா? மக்களின் கோபத்தையும், தோல்வியையும் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் பாஜக தலைவர்களும், தொண்டர்களும் பிரச்சாரத்தைத் தவிர்க்க வெயில் கடுமையாக இருக்கிறது என சாக்குபோக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்" என கூறியுள்ளார்.