கரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் 15 மாவட்டங்களுக்கு சீல் வைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரசால், சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில்,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82,000-ஐ கடந்துள்ளது. மேலும், 3,02,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000-ஐ கடந்துள்ளது.நூற்றுக்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர்.மேலும், 326 பேர் வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு குணமாகியுள்ளனர்.இந்நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் 15 மாவட்டங்களுக்கு சீல் வைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அம்மாநிலத் தலைமைச் செயலாளர் ஆர்.கே. திவாரி, "நொய்டா, காஜியாபாத், மீரட், லக்னோ, ஆக்ரா, ஷாம்லி, சஹரன்பூர் உள்ளிட்ட கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் 15 மாவட்டங்கள் சீல் வைக்கப்பட உள்ளது.ஆன்லைன் விநியோகம் செய்பவர்கள்,மருத்துவப் பணியில் உள்ளவர்கள் மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படுவர்.பாதிப்பு அதிகமாக இருப்பதால், சமூகப் பரவலைத் தடுக்க இது செய்யப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.