ஆண் நண்பர்களை பெண்கள் அடிக்கடி மாற்றிக்கொள்வது போல நிதிஷ்குமாரும் அடிக்கடி கூட்டணியை மாற்றிக்கொள்வதாக பீகார் மாநில பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விகார் வர்க்கியா தெரிவித்துள்ளது அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் பாஜக உடன் இணைந்து ஆட்சி அமைத்து வந்த நிதிஷ்குமார், அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில வாரங்களுக்கு முன்பு அக்கூட்டணியில் இருந்து வெளியேறினார். மேலும் அடுத்த நாளே ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகளின் உதவியுடன் மீண்டும் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக எட்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அம்மாநில பாஜக தலைவர் கைலாஷ் விகார் வர்க்கியா, "பீகாரில் தற்போது ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ளது. இது சந்தர்ப்பவாத நடவடிக்கை. இதில் ஜனநாயகம் சிறிதும் இல்லை. நிதிஷ்குமார் வெளிநாடுகளில் பெண்கள் ஆண் நண்பர்களை அடிக்கடி மாற்றிக்கொள்வதை போல் இவரும் கூட்டணியை மாற்றிக்கொண்டுள்ளார். எப்போது எவருடன் கூட்டணி வைப்பார் என்று அவருக்கே தெரியாது. அரசியல் நம்பகத்தன்மை இல்லாதவர் நிதிஷ்குமார். இந்த ஆட்சி நீண்ட காலம் இருக்காது" என்றார்.