மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியில் சாவித்ரிபாய் புலே என்ற பிரபல பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில், இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும், 19 வயது இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், ஹிந்து மாணவிகளுடன் பேசியதாகவும், மதத்தின் பேரில் பிரச்சாரம் செய்ததாகவும் கூறி, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அந்த மாணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், போலீசார் விசாரணையில், ‘பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மாணவர் சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் திறன் மேம்பாட்டு பிரிவில் படித்து வருகிறார். அவர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் சுமார் ஒன்பது மாதங்களாக தங்கியுள்ளார். இந்த நிலையில், அவர் ஏப்ரல் 7ஆம் தேதி மதியம் 2 மணியளவில், தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் கேண்டீனில் மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.
அப்போது, 6 மாணவர்கள் அந்த கேண்டீனுக்கு மூன்று இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அங்கு வந்தவர்கள், பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மாணவரிடம் ஆதார் அட்டை கேட்டு வாக்குவாதம் செய்தனர். அப்போது, அவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்ததும், மதம் தொடர்பாக தவறாகப் பேசி அவரைத் தாக்கியுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.