நம் அன்றாட வாழ்வில் தவிர்க்கவே முடியாத அளவிற்கு ஓர் அங்கமாகவே மாறிவிட்டன பாலிதீன் பொருட்கள். எளிதில் மக்கிவிடாததும், அழித்து விட முடியாததுமாக இருக்கும் இந்த பாலிதீன் பொருட்களால், நம் சுற்றுச்சூழல் ஏற்கெனவே அழிவை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது. அதன் அதீத தாக்கத்தை மனிதர்களுக்கு முன்பாக விலங்குகள் அனுபவிக்கத் தொடங்கியிருப்பதை உணர்த்தியுள்ளது பீகாரில் நடைபெற்ற நிகழ்வு.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில், சில தினங்களுக்கு முன்னர் ஆறு வயதான பசு மாட்டிற்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதில் பசுமாட்டின் வயிற்றில் உள்ள நான்கு அடுக்களிலும் படிந்து கிடந்த 80 கிலோ பாலிதீன் பைகள் அகற்றப்பட்டுள்ளன.
இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர், ‘எனது 13 வருட அனுபவத்தில் 80 கிலோ பாலிதீன் பைகளை மாட்டின் வயிற்றில் இருந்து நீக்கியது இதுவே முதல்முறை’ என தெரிவித்துள்ளார்.
தெருக்களில் திரியும் விலங்குகள் பல குப்பைகளில் கிடக்கும் பாலிதீன் பைகளை அப்படியே விழுங்கிவிடுகின்றன. மாடுகள் போன்ற விலங்குகள் உணவை அப்படியே விழுங்கி, பின்னர் அசைப்போடும் பழக்கம் கொண்டவை. அவற்றின் வயிற்றில் இந்த பாலிதீன் பைகள் தங்கி, பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கி, இறுதியில் மரணத்தை ஏற்படுத்துகின்றன.
பாலிதீன் போன்றவற்றால் உலகம் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை உணர்த்துகின்றன இதுபோன்ற செய்திகள். உடனடி மாற்று வழிகளைத் தேடித் தீர்வு காணாவிடில், நம் எதிர்கால சமூகம் மிகப்பெரிய விலை கொடுக்கவேண்டி வரும் என்பதே உண்மை.