ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே போன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஹரியானா சட்டமன்றத்திற்கு கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 67.90% வாக்குகள் பதிவானது. அதே போல், ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளில் 3 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 63.88% வாக்குகள் பதிவானது.
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தற்போது அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி, பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களான 50 மேற்பட்ட இடங்களை கடந்து முன்னிலை வகித்து வருகிறது. பா.ஜ.க 28 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சிக்கு வெறும் 2 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதை தவிர, 9 இடங்களில் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள்.
இதில், தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, தான் போட்டியிட்ட பட்காம், காந்தர்பால் ஆகிய இரண்டு இடங்களிலும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். குறைவான தொகுதிகளை மட்டுமே கைப்பற்றிருக்கும் பா.ஜ.க ஆட்சி அமைக்க முடியாத காரணத்தினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கைப்பற்றியிருப்பதாலும், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்த நிலையில், தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா, காஷ்மீர் முதல்வராக பதவியேற்கவுள்ளார் என்று அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “10 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் எங்களுக்கு ஆணையை வழங்கியுள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய கடவுளிடம் பிரார்த்திக்கிறோம். இனிமேல், இங்கு போலீஸ் ராஜ்ஜியம் இருக்காது; மக்களின் ராஜ்ஜியம் தான். நிரபராதிகளை சிறையில் இருந்து விடுவிக்க முயற்சிப்போம். ஊடகங்கள் சுதந்திரமாக இருக்கும். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம்.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து யூனியன் பிரதேசமாக மாறிய ஜம்மு மற்றும் காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க தேசிய மாநாட்டு கட்சி போராடுவதற்கு இந்தியா கூட்டணி உதவும். காஷ்மீரில் உமர் அப்துல்லா முதலமைச்சர் ஆவார்” என்று கூறினார்.