கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி பதவி வகித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து மாநில துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வர் பதவி வகித்து வருகிறார். இதில் சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மாநில அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில், அவ்வப்போது ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி மேலிடம் எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்தி வருகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி படுதோல்வி அடைந்தது. ஆனால் பாஜக கட்சி அம்மாநிலத்தில் அதிக இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இந்த தேர்தலுடன் நடைபெற்ற அம்மாநில இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் தலா ஒரு இடத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதனால் கூட்டணி கட்சித்தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு எம்.எல்.ஏக்கள் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனால் கர்நாடக மாநில அரசியலில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் அம்மாநில முதல்வர் குமாரசாமி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவ்வப்போது எம்.எல்.ஏக்களிடம் சமாதானப்படுத்தும் முயற்சியில் முதல்வர் குமாரசாமி அமெரிக்காவில் இருந்த வாறே தொலைப்பேசி வாயிலாக பேசி வருகிறார்.
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தவர்களில் ஒருவரான ஆனந்த் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெல்லாரியில் ஜிண்டால் நிறுவனத்திற்கு மாநில அரசு 3,667 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இது பெல்லாரி மாவட்டத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். அதனால் தான் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தேன் என்று கூறினார். என்னுடைய ராஜினாமாவில் அரசியல் இல்லை. நான் எந்த கட்சிக்கு ஆதரவாகவும் செயல்படவில்லை. எனது மாவட்டத்திற்கு ஏற்படும் அநீதியை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனது தொகுதியான விஜயநகரை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அதே போல் எனது கோரிக்கையை அரசு ஏற்கும் பட்சத்தில் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற தயார் என கூறினார்.
காங்கிரஸ் எம்.எல்ஏக்கள் தொடர் ராஜினாமாவிற்கு பாஜக கட்சி காரணம் என்ற குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. மேலும் அம்மாநில 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக அரசியல் சூழ்நிலையை பாஜக கட்சி தொடர்ந்து கண்காணித்து வருவதாக டெல்லி அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க அமெரிக்கா பயணத்தை ரத்து செய்து முதல்வர் குமாரசாமி விரைவில் கர்நாடக வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.