கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட வேட்பு மனுத்தாக்கல் முடிந்து தற்போது தீவிர பிரச்சாரம் தொடங்கியுள்ளது.
கர்நாடகாவின் பாகல்கோட் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். நேற்று பாகல் கோட் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் பேசுகையில், ''வலுவான மாநிலமாக கர்நாடகாவை உருவாக்க மோடியின் கைகளில் கர்நாடகாவை ஒப்படையுங்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழல் அதிகரிக்கும். மாநிலத்தில் மீண்டும் இரட்டை எஞ்சின் ஆட்சி அமைய பாஜகவை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்' என அவர் கேட்டுக் கொண்டார்.
எதிர்புறமோ காங்கிரஸ் பாஜகவினர் பண பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதால் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் அண்ணாமலை தேர்தல் முடியும் வரை கர்நாடகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் மாநில காங்கிரஸ் கமிட்டி புகார் அளித்துள்ளது. 'முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தனது முந்தைய அதிகாரத்தை பயன்படுத்தி காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்களை பாஜகவின் தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்.
ஆள் பலம், பணபலம் ஆகியவற்றை பாஜகவின் வேட்பாளர்களுக்கு விநியோகித்து வாக்காளர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபடுவதை தடுக்க சில காங்கிரஸ் தலைவர்களுக்கு வருமான வரி சோதனை நடத்த நேரிடும் என மிரட்டல்களும் விடப்பட்டுள்ளது. எனவே பாஜகவின் நட்சத்திர பரப்புரையாளர் என்ற அந்தஸ்தை நீக்கி தேர்தல் முடியும் வரை கர்நாடகத்தில் நுழைய அண்ணாமலைக்கு தடை விதிக்க வேண்டும்' என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.