
கடந்த ஆண்டு, விழுப்புரம் மாவட்டம் – மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவன், மாணவி ஒருவரை ஒருதலையாய்க் காதலித்து, வகுப்பறையில் வற்புறுத்தி, கழுத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டியது, தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தற்போது, 11-ஆம் வகுப்பு படிக்கும் மைனர் பெண்ணுக்கு, அதே வகுப்பில் படிக்கும் மைனர் சிறுவன் தாலி கட்டிய சம்பவம், ஆந்திராவை அதிரவைத்துள்ளது. இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள், 12-ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை வழங்கி வருகின்றன. தெலங்கானா, மகாராஷ்டிரா, ஒடிசா, அஸ்ஸாம், கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஜூனியர் கல்லூரி என்ற அமைப்பு உள்ளது. இங்கெல்லாம், 10-ஆம் வகுப்பில் தேறியவர்கள், 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளை ஜூனியர் கல்லூரிகளில் படிப்பார்கள். கடந்த 17-ஆம் தேதி, ஆந்திர மாநிலம் - கிழக்கு கோதாவரி மாவட்டம் – ராஜமகேந்திரவரத்தில் இயங்கி வரும் அரசு ஜூனியர் கல்லூரியின் வகுப்பறையில், ஒரு மாணவனும், மாணவியும், இப்படி ஒரு திருமணம்(?) செய்துகொண்டது, வீடியோ பதிவு மூலம், சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து, திருமணம் செய்துகொண்ட அந்த மைனர் சிறுவன், மைனர் சிறுமி, அவர்களுக்கு உதவிய மற்றொரு மாணவி என மூன்று பேரை, ஜூனியர் கல்லூரியில் இருந்து நீக்கம் செய்துள்ளார், முதல்வர். மாணவனும் மாணவியும் தாலி கட்டிய வீடியோ காட்சி மற்றும் புகைப்படங்கள், அந்த ஜூனியர் கல்லூரி முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடனே, மூவருக்கும் மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) வழங்கி வீட்டுக்கு அனுப்பிவிட்டது, அந்த ஜூனியர் கல்லூரி.
சினிமாவில்கூட, பள்ளி மாணவர்கள் காதலிப்பதுபோல்தான் காட்சிகள் வரும். நிஜத்திலோ, அதனை மிஞ்சும் விதத்தில், வகுப்பறையில் மாணவனும் மாணவியும் தாலி கட்டி, விதிமீறலாகத் திருமணமே செய்துகொண்டுள்ளனர்.
எல்லாம் காலக்கொடுமைதான்!