பஞ்சாப் மாநிலத்தில் உட்கட்சி பூசல் பெரிதானதையடுத்து, அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங், தனது பதவியை இராஜினாமா செய்தார். இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் தலைமை தேர்ந்தெடுத்தது. அவர் இன்று (20.09.2021) பஞ்சாப் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தான் ஒரு ஆம் ஆத்மி என கூறியுள்ளார். பதவியேற்ற பிறகு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறியதாவது, “'ஆம் ஆத்மி' பற்றி மற்ற கட்சிகள் பேசிக்கொண்டிருக்கும்போது, ஆம் ஆத்மி (சாதாரண மனிதன்) ஆகிய நான் இங்கு அமர்ந்திருக்கிறேன். என் தந்தை மற்றவர்களின் வீடுகளில் கூடாரம் அமைப்பவர். காங்கிரஸ் ‘ஆம் ஆத்மி’யை உயர்த்தியுள்ளது. ராகுல் காந்திக்கு இந்தக் கடனை என்னால் திருப்பி செலுத்த முடியாது. அம்பேத்கரின் சிந்தனையுடன் ஒத்துபோவோரை ராகுல் காந்தி ஆதரிக்கிறார். ராகுல் காந்திக்கு ஒவ்வொரு பஞ்சாபி சார்பாகவும், கேப்டன் அமரீந்தர் சிங் உட்பட ஒவ்வொரு எம்.எல்.ஏ. சார்பாகவும் நன்றி தெரிவிக்கிறேன்.
மக்களுக்கு சேவை செய்ய ராகுல் காந்தி எனக்கு இந்த வாய்ப்பை அளித்துள்ளார். நான் ஒரு 'ஆம் ஆத்மி'. நான் ஒரு சாதாரண மனிதனின், விவசாயியின், ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதி. நான் பணக்காரர்களின் பிரதிநிதி அல்ல. மணல் அள்ளுபவர்கள் மற்றும் அதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னை சந்திக்க வர வேண்டாம். நான் உங்கள் பிரதிநிதி அல்ல. பஞ்சாப், விவசாயம் அதிகமுள்ள மாநிலம். நான் விவசாயிகளுடன் இருக்கிறேன்.
பஞ்சாப் அரசு விவசாயிகளுடன் நிற்கிறது. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுமாறு நாங்கள் மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகளின் தண்ணீர் மற்றும் மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்வோம். கட்சிதான் முதன்மையானது. முதல்வரோ அல்லது அமைச்சரவையோ அல்ல. கட்சியின் சித்தாந்தத்தின்படி அரசு செயல்படும். பஞ்சாப் மக்களுக்காக கேப்டன் அமரீந்தர் சிங் நிறைய நற்பணிகளை மேற்கொண்டார். நாங்கள் அவருடைய பணியை முன்னெடுப்போம்.”
இவ்வாறு சரண்ஜித் சிங் சன்னி கூறினார்.