முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பணிகளை மேற்கொள்ள கேரள அரசு ஒத்துழைக்காவிட்டால் தமிழகம் நீதிமன்றத்தை நாடலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது உள்ள அணை பாதுகாப்பானதல்ல, புதிய அணை கட்டப்பட வேண்டும் என கேரளாவைச் சேர்ந்தவர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களும், அணை பலமாக இருக்கிறது என தமிழக அரசு கொடுத்துள்ள பதில் மனுக்களும் ஒருசேர உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இந்த பிரச்சனை நீண்ட காலமாக தொடர்கிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண விரும்புகிறோம். இதற்காக அணை மேற்பார்வை குழுவில் சில மாற்றங்களை கொண்டு வர இருக்கிறோம். முல்லைப்பெரியாறு மேற்பார்வை குழுவை தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுவாக மாற்றலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். அந்த குழு வழங்கும் பரிந்துரைகளை ஏற்று சம்பந்தப்பட்ட அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அப்பொழுது குறுக்கிட்ட தமிழக வழக்கறிஞர், தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பணிகளை மேற்கொள்ள கேரளாவின் காவல்துறை எல்லைக்குள் சென்றுதான் செய்யமுடிகிறது. அப்படி செல்கையில் கேரள அரசு ஒத்துழைக்க மறுப்பதாகத் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், அப்படியென்றால் உடனடியாக நீங்கள் நீதிமன்றத்தை நாடலாம். இதற்காக உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்றால் கூட அதனைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றனர்.