பெங்களூரில் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் சிஇஓ ஆகிய இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலைக்கு காரணமாக இருந்த இன்ஸ்டா, டிக்டாக் பிரபலம் போட்ட பதிவு வைரலாகி வருகிறது.
பெங்களூரின் வடகிழக்கு தியான பம்பை எக்ஸ்டென்ஷனில் 'ஏரோனிக்ஸ் இன்டர்நெட் பிரைவேட் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணீந்திர சுப்ரமண்யா என்பவரும் சிஇஓவாக வினு குமார் என்பவரும் இருந்தனர். இவர்கள் இருவரையும் மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினர். இதில் அலுவலக வளாகத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் அதே நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்த பெலிக்ஸ் என்ற முன்னாள் ஊழியர் இந்த கொலையில் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. டிக்டாக் பிரபலமான பெலிக்ஸ் சில மாதங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். தனது நிறுவனத்திற்கு ஏற்படும் போட்டியை தடுக்கவே இருவரையும் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இந்த கொலையில் ஈடுபட்ட பெலிக்ஸ் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொலை நிகழ்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பெலிக்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இந்த கிரக மக்கள் எப்போதும் ஏமாற்றுக்காரர்கள். அதனால் இந்த கிரக மக்களை காயப்படுத்துவேன். கெட்டவர்களை மட்டுமே காயப்படுத்துவேன். எந்த நல்ல மனிதர்களையும் காயப்படுத்தமாட்டேன்' எனப் பதிவிட்டுள்ளார். இதை வைத்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.