கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்துக்காக 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களை 150 நாட்கள் 3,570 கி.மீ தூரம் என நடந்தே செல்லும் ராகுல் காந்தி, நேற்று 7ம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து பயணத்தை தொடங்கினார். முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின், தேசியக் கொடியை ராகுல் காந்தியின் கையில் கொடுத்து பயணத்தை தொடங்கி வைத்தார். இதற்காக முதல்வர் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வந்தார்.
ராகுல் காந்தி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வந்தார். பின்னர் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் முன்னாள் முதல்வர் கலைஞர் எழுப்பிய திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்துக்கு பூம்புகார் படகு மூலம் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து காந்தி மண்டபத்துக்கு வந்த ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுடன் அங்கு 20 நிமிடம் கண்களை மூடி கொண்டு தியானம் செய்தார். அப்போது அங்கு தமிழில் இசையஞ்சலி மூலம் காந்தியின் நினைவுகள் கூறப்பட்டது.
பின்னர் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த தேசியக் கொடியை பிடித்தபடி ராகுல் காந்தி 600 மீட்டர் தூரம் நடந்து காங்கிரஸ் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் எழுந்து நின்று உற்சாக குரல் கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் வந்தேமாதரம் ஆகியவை பாடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் இந்திய ஒற்றுமை பயணத்தை வாழ்த்தி சோனியா காந்தி கொடுத்த கடிதம் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கா் முதல்வா், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவா் செல்வ பெருந்தகை, ப.சிதம்பரம், பாராளுமன்ற காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுனா கார்கே, வேணு கோபால் ஆகியோர் பேசினார்கள்.
பின்னா் ராகுல் காந்தி பேசும் போது, “தமிழ்நாட்டுக்கு வந்து செல்லும் போதெல்லாம் மனநிறைவுடன் செல்கிறேன். சிலர் நமது தேசியக் கொடியையும் அதன் மூவா்ணத்தையும் சக்கரத்தையும் பார்த்து இது ஒரு சாதாரண துணி என நினைக்கிறார்கள். இது வெறுமனே சக்கரமும் துணியும் அல்ல அதை விட மேலானது. இந்த கொடி நம் கைக்கு சாதாரணமாக வரவில்லை நன்கொடையாகவும் கிடைக்கவில்லை இது இந்திய மக்களால் மீட்டெடுக்கப்பட்ட கொடி. அப்படிபட்ட தேசிய கொடியை பா.ஜ.க.வும், ஆா்.எஸ்.எஸ்.ஸும் மிகப்பெரிய தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கியிருக்கிறார்கள்.
தேசியக் கொடி ஒரு மாநிலத்துக்கும், ஒரு மொழிக்கும் சொந்தமானது அல்ல. இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பிரதிநிதித்துவம் படுத்துவது தான் தேசியக் கொடி. இதனால் தற்போது தேசத்தை ஒற்றுமைபடுத்த அவசியம் ஏற்பட்டுள்ளது. பாஜக மதத்தின் மூலமாகவும் மொழியின் மூலமாகவும் நாட்டை பிளக்க நினைக்கிறது. சிபிஐ, வருமான வரித்துறையை வைத்து எதிர் கட்சியினரை மிரட்டி வருகிறது” என்றார். ராகுல் காந்தியின் ஆங்கில உரையை பீட்டர் அல்போன்ஸ் மொழி பெயா்த்து தமிழில் பேசினார்.