ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாகக் கடந்த சில மாதங்களாகக் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மேக வெடிப்பு எனும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அளவுக்கு மிஞ்சிய மழை தொடர்ந்து பொழிந்து வருகிறது.
இதனால் சிம்லா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. நேற்று சிம்லாவில் உள்ள கிருஷ்ணா நகர் என்ற பகுதியில் பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் 6 வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்தாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது. இதேபோன்று மற்ற இரு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த சோதனையான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். மழைக் காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய உத்தரவிட்டுள்ளோம்” என்று பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.