தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாரத் ஸ்டேட் வங்கி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தேதியை நிர்ணயித்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்திலும் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி நாடு முழுவதும் 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், வாங்கிய தேதி வாங்கிய தொகை ஆகியவை விவரங்களாக தேர்தல் ஆணையத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தும் பென்டிரைவ் வடிவில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, தேர்தல் பத்திரம் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடைகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பான விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில் அதிகபட்சமாக நாட்டிலேயே அதிக நன்கொடை பெற்ற கட்சியாக பாஜக முதலிடத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன. தேர்தல் பத்திரம் மூலம் பாஜக 6,060 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. பாஜகவிற்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1,609 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி 1,421 கோடி ரூபாயும், பிஆர்எஸ் கட்சி 1,214 கோடியும் நன்கொடை பெற்றுள்ளன. திமுக 617 கோடி ரூபாயும் பெற்றுள்ளது. தேர்தல் பத்திரம் குறித்த தகவல் வெளியான நிலையில் இந்திய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில், பா.ஜ.க.வின் மொத்த வங்கிக் கணக்கை முடக்க வேண்டும் என்றும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது குறித்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக எப்படி பணம் சம்பாதித்தது என்பதை இன்று உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது. பா.ஜ.க.வின் அறிவுறுத்தலின் பேரில், காங்கிரஸ் கட்சி கணக்குகளை வருமானத்துறையினர் முடக்கிவிட்டனர். எங்களின் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. இதை வைத்து எப்படி தேர்தலுக்கு செல்வது?
எங்கள் கணக்குகள் முடக்கப்படும், ஆனால் அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படாமல் இருக்கும். பாஜகவிற்கு இவ்வளவு பெரிய தொகை, எப்படி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக கிடைத்தது. இவர்கள் தொழிலதிபர்களையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் மிரட்டி இந்த பணத்தை வாங்கினார்களா அல்லது லஞ்சமாக பெறப்பட்டதா போன்றவை குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். அதுவரை பாஜகவின் வங்கி கணக்கு முடக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
அதேபோன்று, கார்கே தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “எஸ்.பி.ஐ வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மொத்தமாக வசூலிக்கப்பட்ட தேர்தல் பத்திரப் பணத்தில் பாஜகவுக்கு 50% நன்கொடை கிடைத்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 11% நிதி மட்டுமே கிடைத்தது. சந்தேகத்திற்குரிய பல நன்கொடையாளர்கள் உள்ளனர். இவர்கள் யார்? இவை எந்த நிறுவனங்கள்? அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ போன்ற ரெய்டுகளுக்குப் பிறகுதான், பல நிறுவனங்கள் நன்கொடை அளித்திருக்கிறது. அத்தகைய நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்தது யார்? பாஜகவின் இந்த ஊழலை விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் உயர்மட்ட விசாரணையை நாங்கள் கோருகிறோம். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. ஆனால், கோடி, கோடியாக பணம் சம்பாதித்த பாஜக மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, விசாரணையுடன் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட நிதியின் சட்ட விரோதமான தன்மை காரணமாக பாஜகவின் வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்க வேண்டும் என்று கோருகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.