ராகுல் காந்தி மீது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து தான் 'தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்' என அவருடைய ட்விட்டர் பக்கத்தின் சுயவிவரத்தை ராகுல் காந்தி மாற்றி இருந்தார். மேலும் மக்களவைச் செயலாளர் கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து அங்கிருந்து வெளியேறிய ராகுல் காந்தி அவருடைய தாயார் சோனியா காந்தி வீட்டில் தங்கி இருக்கிறார்.
இதனிடையே இந்த தண்டனையை எதிர்த்து கடந்த 3 ஆம் தேதி சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல் முறையீட்டு மனு குஜராத் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.