இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிராக பரவி வருகிறது. தினசரி இரண்டு லட்சம் பேருக்கு கரோனா உறுதியாகி வந்த நிலையில், நேற்று (21.04.2021) ஒரேநாளில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமையில் உள்ள ராகுல் காந்தி, தொடர்ந்து சோகமான செய்திகள் வருகிறது என தெரிவித்துள்ளதோடு, மத்திய அரசின் கொள்கையும் இந்தியாவிற்கு நெருக்கடிதான் என விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். சோகமான செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் நெருக்கடி என்பது கரோனா மட்டுமல்ல; மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளும்தான். பொய்யான கொண்டாட்டங்களும், வெற்றுப்பேச்சும் வேண்டாம். நாட்டிற்கு ஒரு தீர்வை கொடுங்கள்" என கூறியுள்ளார்.