உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஹத்ராஸ் பகுதியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை போலீஸார் கட்டாயப்படுத்தி இரவோடு இரவாக தகனம் செய்ய வைத்ததாக அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த 14 -ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிந்த நிலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்த அந்த பெண், டெல்லி ஜவஹர்லால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் சிறப்பு சிகிச்சைக்காக அங்கிருந்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அந்த பெண் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, கொலை சம்பவத்தில் ஈடுபடல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெண்ணின் உடலை போலீஸார் கட்டாயப்படுத்தி இரவோடு இரவாக தகனம் செய்ய வைத்ததாக அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கூறுகையில், "நாங்கள் காலையில் இறுதிசடங்கு செய்கிறோம் என்று போலீஸாரிடம் கூறினோம். ஆனால் அவர்கள் அவசரமாக இருந்தார்கள், உடனடியாக அதை செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள். இறந்து 24 மணி நேரம் ஆகிவிட்டதாகவும், எனவே உடல் சிதைவடைவதாகவும் அவர்கள் கூறினர். காலையில் இறுதிசடங்கு நடந்தால் உறவினர்கள் அனைவரும் வருவார்கள் எனக் கூறினோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
அவர்கள் விருப்பத்திற்கே செய்தார்கள், எங்களுக்கு பயமாக உள்ளது. இரவோடு இரவாக சடலத்தை தகனம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்ல போலீஸார் எங்களைக் கட்டாயப்படுத்தினர். காலையில் இதை செய்வோம் என்று நாங்கள் கூறினோம். இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்து குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்று மாநில அரசிடம் கோருகிறோம். எண்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும். உள்ளூர் நிர்வாகம் எங்களை நிறைய அழுத்தங்களுக்கு உள்ளாக்குகிறது. உள்ளூர் காவல்துறையை நாங்கள் நம்பவில்லை, நீதி விசாரணை நடத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.