
மேற்கு வங்கத்தில் வரும் 27 ஆம் தேதி தொடங்கி, எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையே நேரடிப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடி, அமித்ஷா என பாஜக தலைவர்கள் ஒரு பக்கம் பிரச்சாரத்தில் ஈடுபட, இன்னொரு பக்கம் மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், மேற்குவங்கத்தின் ஜர்கிராமில் மத்திய அமைச்சர் அமித்ஷா, பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அந்தப் பொதுக்கூட்டத்திற்கு வராத அமித்ஷா, காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் ஹெலிகாப்டர் பழுதானதால் பொதுக்கூட்டத்திற்கு நேரில் வரமுடியவில்லை எனத் தெரிவித்தார்.
அதேநேரத்தில் பெரிய அளவில் கூட்டம் இல்லாததால்தான் அமித்ஷா அந்த கூட்டத்திற்கு வருகை தரவில்லை எனத் தகவல் பரவியது. மேலும் அந்த கூட்டத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகளும் காலியாக இருப்பது போன்ற புகைப்படங்கள் பரவின. இந்தநிலையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையனும், அமித்ஷா பொதுக்கூட்டத்திற்கு வருகை தராததற்குப் பெரிய அளவில் கூட்டம் இல்லாததே காரணம் எனத் தெரிவித்துள்ளார். இத்தொடர்பாக அவர், சுற்றுலாக் கும்பலின் உதவி (விற்பனை) மேலாளர் கூட்டத்திற்கு வராததற்கான நான்கு காரணங்கள் எனக் கூறி, பொதுக்கூட்டத்தில் மக்கள் சிறிய அளவில் இருப்பது போன்றும், நாற்காலிகள் காலியாக இருப்பது போன்றும் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.