தெலுங்கானா மாநிலத்தில், மாநில தொழிலாளர்கள் நலத்துறை, குழந்தை தொழிலாளர்கள் சம்மந்தப்பட்ட ஒரு ஆய்வை பத்து மாவட்டங்களில் மேற்கொண்டது. இந்த ஆய்வு இரு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதில் முதல் கட்ட ஆய்வு தற்போது நிறைவு பெற்றுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட ஆய்வுகள் மேற்கொண்டுபட்டு வருகிறது. இதன் அதிகாரப்பூர்வ முழுத் தகவல்கள் ஏப்ரல் இறுதியில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் தற்போது முதல் கட்ட ஆய்வு நிறைவு பெற்றிருக்கும்தருவாயில், அதன் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் 80% முதல் 90% குழந்தை தொழிலாளர்கள், பட்டியல் இனத்தவர்களை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது. அதாவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 9,724 குழந்தைகள் பட்டியலினத்தவர்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதில் 6 முதல் 8 வயது உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 15 எனவும், மேலும் 1,605 குழந்தைகளின் வயது 9 முதல் 14-க்குள் உள்ளது எனவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக 15 முதல் 18 வரையிலான வயது உள்ளவர்கள் 8,105 பேர் பணிபுரிவதாகத் தெரியவந்துள்ளது. இவர்கள் யாரும் பள்ளிக்கு செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை தொழிலாளர்கள் சட்டத்தில் 2016-ல் மேற்கொண்ட திருத்தத்தின்படி 14 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் இளம் பருவத்தினர் எனவும், இவர்களை ஆபத்தான பணி சூழல் உள்ள தொழிற்சாலைகளில் பணி அமர்த்துவதோ, ஈடுபடுத்துவதோ குற்றம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதி முதல் இந்த (பிப்ரவரி) மாதம் தொடக்கம் வரை இதே தெலுங்கானா மாநிலத்தில் கிட்டத்தட்ட 2,119 குழந்தை தொழிலாளர்கள் ‘ஆப்ரேஷன் ஸ்மைல்’ எனும் செயல்பாட்டின் மூலம் மீட்கப்பட்டனர். இதில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 466 என்பது வருந்தத்தக்கது.
அந்த மீட்பு நடவடிக்கைக்கு பின் தெலுங்கானா காவல்துறை தரப்பில் வெளியிட்ட அறிவிப்பில், மொத்தம் 2,119 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 1,653, மற்றும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 466 எனும் தகவலை தெரிவித்திருந்தது.