டிசம்பர் 2 அன்று தென்காசி மாவட்டத்தின் புளியரையை ஒட்டியுள்ள கேரளாவின் நுழைவு வாயிலான கேரள மாநிலத்தின் ஆரியங்காவு சோதனைச் சாவடியைக் கடந்து ஆந்திர மாநில வாகனத்தின் நான்கு டோர்களிலும் பதுக்கிவைத்துக் கடத்தப்பட்ட சுமார் ஒன்றரைக் கோடி மதிப்பிலான தெலுங்கான கஞ்சா 65 கிலோவைப் புனலூர் டி.ஒய்.எஸ்.பி.யான வினோத் குமாரின் டீம் சோதனையில் கைப்பற்றியது.
அடுத்து டிச. 23 அன்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாரின் தகவலின்படி நகரில் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 22 கிலோ அளவிலான 32 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு ஹெராயின் கைப்பற்றப்பட்டிருக்கிறது. தொடர்ந்து டிச. 26 அன்று தென்காசி மாவட்டத்தின் புளியரையை ஒட்டியுள்ள கேரளாவின் பத்னாபுரம் போலீசாரால் கர்நாடகாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி மதிப்புள்ள ஒரு கிலோவிற்கும் மேற்பட்ட உயரிய போதைப் பொருளான ஹசீஷ் ஆயில் எனப்படும் போதை லேகியம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
இவை அனைத்துமே தென்மாவட்ட வழிகளிலேயே பயணப்பட்டதாக சொல்லப்படுவதோடு, மூன்றே வாரத்தில் சுமார் முப்பத்தி ஐந்தரைக் கோடி மதிப்பிலான இது வரையிலும் கேள்விப்பட்டிராத அளவு போதைப் பொருள்கள் பிடிபட்டதால் தென்மண்டலம் போதைவழிச் சந்தையாகிறதா என்ற பிம்பம் ஏற்பட்டிருப்பதற்கான கருத்துக்களும் பரவலாகியுள்ளன.
டிச. 26 அன்று மாலை கேரளாவின் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், கேரளாவின் புனலூரை அடுத்த பத்னாபுரம் கல்லுங்கடவுப் பகுதியில் வாகனச் சோதனையிலிருந்த பத்னாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டரான ஜெயகிருஷ்ணன் மற்றும் காவல் நிலையப் போலீசாரும் சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு வாடகைக் காரை மடக்கிச் சோதனை செய்திருக்கிறார்கள். காரினுள்ளே இருந்த இரண்டு பேரின் பையைச் சோதனை செய்ததில் கிட்டத்தட்ட ஒரு கிலோவிற்கும் மேற்பட்ட லேகியம் போன்ற கெட்டியான ஆயில் தன்மை கொண்ட பொருள் சிக்கியிருக்கிறது. சந்தேகப்பட்ட இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணனின் போலீஸ் படை, தங்கள் பாணியில் விசாரித்திருக்கிறார்கள்.
விசாரணையில் அது போதைத் தன்மை கொண்ட ஹசீஷ் ஆயில் என்று அவர்கள் தெரிவித்ததும் அதிர்ச்சியானார்கள். கர்நாடகாவைச் சேர்ந்த டி.ராமு(22), சிவன்குமார் (27) இருவரும் இதனை ஆந்திராவிலிருந்து தமிழகம் வரை ரயிலில் கொண்டு வந்து, பின்னர் தமிழகம் வழியாக ரயிலில் மதுரை வந்தவர்கள் அதன் பின் அங்கிருந்து செங்கோட்டை வழியாக கொல்லம் செல்லும் ரயிலில் பயணப்பட்டு, கேரளாவின் காயங்குளத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் பயணமாகி பின்னர் வாடகைக் காரில் பத்னாபுரம் கொண்டு செல்வதற்காக கல்லுங்கடவு வந்த போது சோதனையில் மாட்டிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.
“வெளிநாட்டு போதைப் பொருளான ஹசீஷ்சுடன் சேர்த்து தயாரிக்கப்பட்ட கடுமையான போதைப் பொருள், ஒரு கோடிக்கும் ஜாஸ்தியான மதிப்பு. பத்னாபுரத்திலிருக்கிற ஏஜண்ட் வசம் ஒப்படைப்பதற்காக கொண்டு செல்லப்படுகிற இவர்களின் செல்போன்களை ஆய்வுசெய்கிறோம். பின்னர் தான் சரக்கு எவருக்குக் கொண்டு செல்லப்படுகிறது என்று தெரியும்” என்கிற இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன், விசாரணை நடத்தப்படுகிறது என்கிறார்.