
என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களிலும் தமிழ் பெயர்களில் தான் இருக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்கப்பட உள்ளதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த 10ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதம் தொடங்கியது. கடந்த 12ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் ரங்கசாமி, “மாநிலத்தில் உள்ள கடை உரிமையாளர்கள், தங்கள் நிறுவனப் பெயர்களின் தமிழில் எழுத வேண்டியது கட்டாயமாக்கப்பட உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில், சுற்றறிக்கை மூலம் கடுமையான வழிமுறைகள் வெளியிடப்படும். அரசுத் துறை விழாக்களுக்கான அனைத்து அழைப்பிதழ்களிலும் தமிழ் பதிப்பு இடம்பெற வேண்டும் என்ற முடிவையும் அரசு எடுத்துள்ளது. இது தமிழ் மொழியின் மீதான அன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாடாகும்” எனத் தெரிவித்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தியது. ஆனால், புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமான மும்மொழி கொள்கை, தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்று கூறி பா.ஜ.க தவிர தமிழக அரசியல் தலைவர்கள் அந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். அதே சமயம், தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான். கல்வி தொடர்பான நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும் இடையே மொழி தொடர்பான மோதல் போக்கு உருவாகி வருகிறது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.