
தனது சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதை மறைக்க தனது குடும்பத்தைக் குற்றவாளியாக்கி நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத் நகரைச் சேர்ந்தவர் 52 வயதான நபர். இவருக்கு, 5 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தனது 7 வயது மகள் பக்கத்து வீட்டுக்காரரான சாந்தி தேவி என்பவர் கொடுத்த உணவினால் நோய்வாய்பட்டு கிடப்பதாக மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, தான் உள்பட குடும்பத்தில் உள்ள 6 பேருக்கும் அந்த உணவை சாப்பிட்டு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், இறந்த சிறுமியின் பிரேதப் பரிசோதனையில் அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சிகரமான செய்தி வந்தது. இதனையறிந்த மருத்துவர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார், மருத்துவமனைக்கு வந்து அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், சம்பவம் நடந்த தினத்தன்று பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த மகளை, குடிபோதையில் இருந்த அந்த நபரி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு, தனது மகளின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த கொலையை மறைப்பதற்காக, மற்ற குழந்தைகளை குற்றவாளிகளாகப் பயன்படுத்தி திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். தனக்கும், தனது குழந்தைகளுக்கும் வயிற்றுப் போக்கு இருப்பது போல் நடித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளார்.
அதில், தனது 7 வயது மகள் மட்டும் சாந்தி தேவி கொடுத்த உணவை சாப்பிட்டு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தான் உண்மையான விவரம் கண்டுபிடிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.