ராஜஸ்தான் மாநிலம், கரெவுளி மாவட்டத்தில் உள்ள ஹிண்டாவுன் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது பெண். இவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். இந்த நிலையில், கடந்த மார்ச் 19ஆம் தேதி சில மர்ம கும்பல், அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு ஹிண்டாவுன் நகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ஹிண்டாவுன் நகர நீதிமன்றத்தின் நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். அப்போது, நீதிபதி காயங்களை காட்டுவதற்காக அந்த பெண்ணின் ஆடைகளை கழற்றும்படி கூறியதாக கூறப்படுகிறது.
இதில் அதிர்ச்சியடைந்த பெண், இது தொடர்பாக நீதிபதி மீது போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரில், ‘என் வாக்குமூலத்தைப் பெற நீதிபதி என்னை அழைத்திருந்தார். அதன்படி, நான் நீதிமன்றத்திற்கு சென்று முழு அறிக்கையை கொடுத்தேன். அதன் பிறகு, நான் வெளியே வர ஆரம்பித்தேன். அப்போது, நீதிபதி என்னை மீண்டும் திரும்ப அழைத்தார். அப்போது, அவர் என் ஆடைகளை கழற்றச் சொன்னார். அதற்கு நான், ஏன் என் ஆடைகளை கழற்ற வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர், என் உடலில் உள்ள காயங்களை பார்க்க விரும்புவதாக கூறினார். உங்க முன்னாடி என்னால துணியை திறக்க முடியாது என்று கூறி, மறுப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியே சென்று விட்டேன்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஹிண்டாவுன் நகர போலீசார் சம்பந்தப்பட்ட நீதிபதி மீது நேற்று (03-04-24) வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை ஆடைகளை கழற்ற சொன்ன நீதிபதி மீது வழக்கு பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.