புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அதுபோல ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது. மேலும் உளவுத்துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அரசு மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் புல்வாமா பகுதியை தொடர்ந்து அடுத்து குஜராத் மாநிலத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் என தற்போது உளவுத்துறை கூறியுள்ளது. தீவிரவாதி கம்ரான் தலைமையில் வந்த 21 தீவிரவாதிகள் 3 குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர். அதில் ஒரு குழு குஜராத் மாநிலத்திற்கு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. இதனால் குஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக தற்போது அந்த மாநில உளவுத்துறையும் எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநிலத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் இடங்களில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.