டெல்லியில் 53 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்ற நிலையில் கூட்டத்திற்கு பிறகு பல்வேறு அறிவிப்புகளை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிவிப்பின்படி, அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே சீரான 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எக்கு, அலுமினியம், இரும்பு உள்ளிட்ட அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே வகையான ஜிஎஸ்டி விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் கேன்கள் மட்டுமல்லாது அட்டைப்பெட்டிகள், சோலார் குக்கர்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே சேவைகளை பொறுத்தவரை நடைமேடை சீட்டு உள்ளிட்ட அனைத்து விதமான ரயில்வே சேவைகளுக்கும் வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் பயணிகள் ஓய்வெடுக்கும் அறை, நடைமேடை சீட்டு, பொருட்களை வைத்திருக்கும் ஸ்டோர் ரூம் உள்ளிட்ட சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்கள் தங்கும் விடுதி கல்வி நிறுவனங்களுக்கு வெளியே இருந்தாலும், மாத வாடகை 20 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக இருந்தாலும், மாணவர்கள் 90 நாட்கள் தொடர்ச்சியாக அங்குத் தங்கினால் அவர்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மத்திய பட்ஜெட் தொடர்பாகவும் மாநில நிதி அமைச்சர்களுடனும் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் அவரிடம் பல்வேறு கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் அளித்துள்ளனர். தமிழக அரசின் சார்பாக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று தமிழகத்தின் கோரிக்கைகளை நிர்மலா சீதாராமனிடம் வழங்கினார்.