கேரள மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகளுக்கு கவர்னர் ஆரிப் முகம்மது கான், பதவிகளை வழங்கி வருவதாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவ அமைப்பான எஸ்.எப்.ஐ.யினர் கவர்னரின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததோடு கவர்னர் செல்லுமிடமெல்லாம் அவருக்கெதிராக ஒரு மாதமாகத் தொடர்ந்து கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜன-27 அன்று மாநிலத்தின் கொல்லம் நகரையடுத்த கொட்டாரக்கரை நகரில் ஒரு சாது சாமியாரைப் பார்ப்பதற்காக கவர்னர் சென்றதாகச் சொல்லப்படுகிறது. கவர்னர் சென்று கொண்டிருந்த நேரம் வழியில் நிலமேல் பகுதியினருகே எதிர்பாராத வகையில் அந்தப் பகுதியில் திரண்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவ அமைப்பான எஸ்.எப்.ஐ. நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு கொடியை கவர்னருக்கெதிராகக் காட்டியதுடன் கண்டனப் பேனர்களுடன் கவர்னரின் காரின் முன்னே பாய்ந்திருக்கின்றனர்.
இதனால் கடும் ஆத்திரமான கவர்னர் ஆரிப் முகம்மதுகான், காரை நிறுத்தச் சொல்லி இறங்கி வேக வேகமாக ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கித் தன் கையை உயர்த்தி எதிர் கோஷமிட்டார். அவர்களுடன் கடுமையான குரலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். கவர்னரின் பாதுகாப்பு போலீசார் மற்றும் வழியோரங்களில் பாதுகாப்புகாப்பின் பொருட்டு நிறுத்தப்பட்ட போலீசார் அனைவரும் திரண்டு கவர்னருக்கு மேலும் பாதுகாப்பு அளித்ததோடு மற்றுமொரு பிரிவு போலீசார், பிரச்சினை பெரியதாகி விடாதபடி தடுத்தவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுற்றி வளைத்து அப்புறப்படுத்தினர். அந்த ஏரியாவில் பதட்டமான கலவரச் சூழல். ஆனால் கவர்னர் பாதுகாப்பு வளையத்தையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தன் குரலை உயர்த்தியிருக்கிறார். பின்னர் அவரைத் தொடர்ந்து வந்த போலீசாரையும் கடுமையாகக் கண்டித்தவர், கமிசனரைக் கூப்பிடு, டி.ஜி.பி.யை வரச் சொல் என்று உத்தரவிட்டவர் சிறிது தூரம் ஆவேசமாக நடந்து சென்று சாலையின் அந்தப்பக்கமாக உள்ள டீக்கடை ஒன்றின் சேரை எடுத்து ரோட்டில் போட்டமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
காவல் மற்றும் பிற அதிகாரிகள் அவரைச் சமாதானப்படுத்தியும் கவர்னர் கேட்பதாகத் தெரியவில்லையாம். சிறிது நேரத்திற்குப் பின் கேரள டி.ஜி.பி.யான ஷேக் தர்வேஷ் சாகிப் கவர்னரைத் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தியவரிடம் கடுப்பான தொனியில் பேசிய கவர்னர், போராட்டம் நடத்தியவர்கள் மீது, நான்-பெய்லபிள் (ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவு) பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வேறு வழியில்லாமல், போராட்டம் நடத்திய எஸ்.எப்.ஐ. அமைப்பினர் 19 பேர் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகே, தனது இரண்டு மணி நேர போராட்டத்தைக் கைவிட்டு விட்டுப் புறப்பட்டார்.
இதனிடையே மத்திய உள்துறை, மற்றும் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட கவர்னர் ஆரிப் முகம்மதுகான், மாநில போலீசாரின் பாதுகாப்பு தனக்கு வேண்டாம். என் உசுரே போயிடும். மத்திய பாதுகாப்பு வேண்டும் என்று அறிக்கை அனுப்பியிருக்கிறார். அதையடுத்தே கவர்னருக்கு, மத்திய உள்துறை சி.ஆர்.பி.எப்பின் இசட்பிளஸ் கமாண்டே பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருக்கிறது.
மாநில கவர்னர் நடந்து கொண்ட இந்த சம்பவம் கேரளா மட்டுமல்ல நாடு முழுக்கப் பரவி அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்தியது. குறிப்பாக கேரளாவில் கவர்னர் மீதான எதிர்மறையான எண்ணங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்த சம்பவத்திற்கு மூன்று நாட்கள் முன்பு கேரள சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் பட்ஜெட் உரையை வாசிக்க முறைப்படி அழைக்கப்பட்ட கவர்னர், பட்ஜெட்டின் உரையை முழுக்கப் படிக்காமல் ஆரம்பத்திலும் கடைசியிலுமாக இரண்டே வரிகளை மட்டும் வாசித்து விட்டுக் கிளம்பியது முதல்வர் பினராயி விஜயன், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைவரும் கவர்னரின் நடடிவக்கையின் மீது கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
கவர்னரின் தர்ணா பற்றியறிந்த கேரள முதல்வரான பினராயி விஜயன், தன் கண்டன அறிக்கையில், கவர்னருக்கு சிறந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரத்திற்கான பட்ஜெட்டை முறைப்படி கவர்னருக்கு வாசிக்க நேரமில்லை. ஐந்து நிமிடத்தில் கிளம்பிப் போய் விட்டார். ஆனால் அவர் ரோட்ல இரண்டு மணி நேரம் இருப்பதற்கு நேரமிருக்கிறது. இந்த அரசை ரொம்ப அவமானப்படுத்துகிற கவர்னரை வெளியேற்றணும். மாநில வளர்ச்சிகளுக்குத் தேவையான மசோதாக்கள், பிற மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் அனைத்தையும் ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டார். மத்திய அரசு கேரளாவுக்கு எழுபதாயிரம் கோடி தரவேண்டும் ஆனால் இரண்டாயிரம் கோடி மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். வேறு எங்கும் கடன் பெறக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும் நெருக்கடியோடு நெருக்கடியாய் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு 90 பாலங்களை மாநிலம் முழுக்க அமைத்துள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் திரண்டு போய் அடுத்த வாரம் டெல்லியில், ஆளுநரைத் திரும்பப்பெறக் கோரியும், மாநிலத்திலத்திற்கு முறையாகத் தர வேண்டிய நிதியினை அளிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்துகிற முடிவிலிருப்பதாகவும் தகவல்கள் றெக்கை கட்டுகின்றன.