மேற்குவங்கத்தில் இந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலை அறுதி பெரும்பான்மையோடு வென்ற மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி,திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களிலும் தனது கிளையைப் பரப்ப முயற்சித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பல்வேறு மாநில காங்கிரஸ் தலைவர்களை தனது கட்சியில் மம்தா இணைத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு திரிபுராவை சேர்ந்த 7 காங்கிரஸ் தலைவர்கள் திரிணாமூல் காங்கிரசில் இணைந்தனர்.
அதன்பின்னர் அசாமின் முக்கிய காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியில் 30 வருடங்கள் அங்கம் வகித்தவரும், காங்கிரஸ் மகளிர் அணித் தலைவியுமான சுஷ்மிதா தேவ் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார்.
அதேபோல் கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான லூய்சின்ஹோ ஃபலேரோ அண்மையில் தனது ஆதரவாளர்களுடன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்தநிலையில் உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் லலிதாஷ் பதி திரிபாதி, தனது தந்தையும் முன்னாள் காங்கிரஸ் மேலவை உறுப்பினருமான ராஜேஷ் பதி திரிபாதியோடு மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ள நிலையில், கட்சியின் துணைத் தலைவரே விலகியிருப்பது அக்கட்சிக்கு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது.