மேற்கு வங்கம் மாநிலத்தில் அம்மாநில முதல்வர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஹத்ராஸ் சம்பவத்திற்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர்.
ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்குப் போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைத் தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சம்பவங்களும் மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்துள்ளன.
உயிரிழந்த இளம்பெண்ணின் சடலத்தை போலீஸாரே இரவு நேரத்தில் தகனம் செய்ததாகக் கூறப்படுவது, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது, பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என போலீஸார் தெரிவித்தது என அடுத்தடுத்து இந்த விவகாரத்தைச் சர்ச்சைகள் சூழ்ந்தன. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக, திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெரிக் ஓ பிரைன், ககோலி ஹோஷ் தஸ்திதார், பிரதிமா மொண்டல் ஆகியோர் நேரில் சென்றபோது ஹத்ராஸ் எல்லையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், டெரிக் ஓ பிரைன் போலீஸாரால் கீழே தள்ளிவிடப்பட்டார்.
இந்நிலையில், உ.பி யில் நடைபெற்ற இந்த கொடூரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்கம் மாநிலத்தில் அம்மாநில முதல்வர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு பேரணியில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் பிர்லா பிளானட்டேரியத்திலிருந்து காந்தி மூர்த்தி வரை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் உ.பி.யில் நடைபெறும் அடக்குமுறைகளுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.