ஜிப்மர் மருத்துவமனையை கண்டித்து திருமாவளவன் எம்.பி நடத்திய போராட்டத்தை புதுவை மாநில ஆளுநர் தமிழிசை கடுமையாக சாடியுள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 63 வகை உயர் சிகிச்சைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற சுற்றறிக்கையை ஜிப்மர் நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்புக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதனைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜிப்மர் மருத்துவமனை நுழைவுவாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர், “புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டு வந்தது. தற்போது மருத்துவத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் மருத்துவம் பார்க்க முடியாமலும், மருந்துகள் வாங்க முடியாமலும் அவதிப்படுகின்றனர். ஏழைகள் இறந்தால் 150 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அவர்களது உடலை எடுத்துச் செல்ல இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்பட்டு வந்தது. அந்த சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு 63 வகை உயர் சிகிச்சைகளுக்கு கட்டண முறை என தற்போது அறிவித்துள்ளார்கள். ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை என்கின்றனர். அந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்” என்றார்.
இதனிடேயே இந்திய அஞ்சல் துறை சார்பில் கைவினைஞர்கள், ஏற்றுமதியாளர்களுக்கான அஞ்சல் வழி ஏற்றுமதி மையம் குறித்து நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில மக்களுக்கு முழு சேவையாற்றி வருகிறது. இந்த மருத்துவமனையில் 70% சேவை தமிழக மக்களே பெறுகின்றனர். மும்பை, சென்னை, பெங்களூர் போன்ற மாநிலங்களில் செய்யக்கூடிய பரிசோதனைகளை இங்கே தற்போது செய்யத் தொடங்கியுள்ளனர். அதையெல்லாம் பாராட்டமாட்டார்கள். ஜிப்ரில் ஏழை மக்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது பொய்யான செய்தி. அவர்களுக்கு இலவசமாகத் தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்வது நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது போல் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. விழுப்புரம் எம்.பிக்கு புதுச்சேரியில் என்ன வேலை? இவர்களுக்கு விளம்பரம் தேவை என்றால் தமிழ்நாட்டில் வைத்துக் கொள்ளட்டும். அவர்கள் தொகுதிக்கு சென்று அங்கு பணி செய்யலாம், புதுச்சேரிக்கு தேவையில்லை. போராட்டம் நடத்தும் அளவுக்கு ஜிப்மர் செயல்படவில்லை. ஜிப்மரில் ஏழை எளிய மக்களிடம் சிகிச்சைக்காக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகிறார்கள். அது எந்த விதத்திலும் உண்மை இல்லை. அப்படி கட்டணம் வசூலித்தால் அதை நானே திருப்பித் தர சொல்கிறேன். ஜிப்மரின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு நாளும் இயக்குநரைத் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். குறை இருந்தால் சொல்லட்டும், அதை சரி செய்யலாம்” என கூறியுள்ளார்.