காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஹரியானா மாநிலம், சோனேபட் பகுதி விவசாயிகளை சமீபத்தில் சந்தித்தார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில் அவர், “ஹரியானாவில் உள்ள சோனேபட்டில், சஞ்சய் மாலிக் மற்றும் தஸ்பீர் குமார் ஆகிய இரு விவசாய சகோதரர்களை சந்தித்தேன். அவர்கள் சிறு வயது நெருங்கிய நண்பர்கள், பல ஆண்டுகளாக ஒன்றாக விவசாயம் செய்து வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து, வயல்களில் உதவி செய்தோம், நெல் விதைத்தோம், டிராக்டர் ஓட்டினோம், பல விஷயங்கள் வெளிப்படையாக நடந்தன.
இந்தியாவின் பலமே விவசாயிகள் தான். இந்தியாவின் விவசாயிகள் நேர்மையானவர்கள் மற்றும் விவேகமானவர்கள். அவர்கள் தங்கள் கடின உழைப்பை நன்கு அறிந்திருக்கிறார்கள். அதே நேரத்தில், அவர்களது உரிமையை அங்கீகரிக்கவும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களது உரிமைகளை பாதுகாக்க மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து உறுதியாக போராடினார்கள். அதுமட்டுமல்லாமல், ஆதார விலை மற்றும் காப்பீட்டுக்கான சரியான கோரிக்கையையும் எழுப்புகின்றனர். அவர்கள் சொல்வதைக் கேட்டு, அவர்களது கருத்தைப் புரிந்து கொண்டால், நாட்டின் பல பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஹரியானாவில் நெல் நடவு பணியில் ஈடுபட்டிருந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் டெல்லியில் உள்ள பிரியங்காவின் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்காவுடன் அவர்கள் மதிய உணவு சாப்பிட்டனர். இதனையடுத்து, அங்கு பெண் விவசாயிகளோடு சோனியா காந்தி நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.