டெல்லியில் இன்று (05/01/2022) மாலை 05.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, "நீட் தேர்வுக்கு விலக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை பல மாதங்கள் ஆகியும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடந்த டிசம்பர் 29- ஆம் தேதி அன்று சந்திக்க சென்றோம்; ஆனால் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா நிலுவையில் இருப்பதற்கு ஆளுநர்தான் பொறுப்பு; ஆளுநர் பதவி விலக வேண்டும். தமிழ்நாடு அனைத்து கட்சி எம்.பி.க்களை அரசியல் காரணமாக, மத்திய உள்துறை அமித்ஷா சந்திக்க மறுப்பதாக நினைக்கிறேன்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி உள்துறை அமைச்சகத்தில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு அனைத்து கட்சி எம்.பி.க்களை சந்திக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க மூன்றாவது முறையாக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இனி நீட் தேர்வால் எந்த உயிரும் பறிபோகக்கூடாது என அரசியல் கட்சியினர் ஒற்றுமையாக மசோதா நிறைவேற்றினோம்.
கடந்த 10 நாட்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் முயற்சி செய்து வருகிறோம். குடியரசுத் தலைவரிடம் அளித்த கோரிக்கை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைப்பதாக கடிதம் வந்தது" எனத் தெரிவித்தார்.