தேர்தல் சமயங்களில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இலவச அறிவிப்புகளை அள்ளி வீசுகின்றன அரசியல் கட்சிகள்.ஆட்சிக்கு வந்த பிறகு அந்த இலவசங்களை நிறைவேற்ற முடியாமல் அல்லாடுகின்றன. அதற்காக ஆயிரம் காரணங்களைக் கூறி தப்பித்துக் கொள்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
இலவசங்கள் மக்களை ஏமாற்றுவதாகவும் இலவசங்களை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபது ரமணா, ’’இலவசங்கள் குறித்து ஆராய்வதற்கு வல்லுநர் குழு ஒன்றை அமைக்கலாம், இதுபற்றி அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி ஏன் விவாதிக்க கூடாது?’’ என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் இது குறித்து விரிவாக கருத்து கூறிய தலைமை நீதிபதி ரமணா, ‘’தேர்தல் காலங்களில் அறிவிக்கப்படும் இலவசங்களை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கான தீர்வை எட்டுவதற்கு ஆழமான நீண்ட விவாதம் தேவைப்படுகிறது. இலவசங்கள் பொருளாதாரத்தை அழிக்கக் கூடியவை. எதிர்க்கட்சியாக இருக்கும் போது இலவசங்களை அறிவிப்பவர்கள் ஆளும் கட்சியாக வரும்போது நிர்வகிக்க கடினமாகிறார்கள். அதனால், இதனை ஆராய வல்லுநர் குழு அமைக்கலாம்’’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்தினை மத்திய அரசு சீரியசாக ஆலோசிப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், தலைமை நீதிபதி இந்த மாதம் ஓய்வு பெற இருப்பதால், மூத்த நீதிபதி சந்திரசூட் தலைமையில் உள்ள 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட உள்ளது இந்த வழக்கு.