Skip to main content

மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டாயம்... வாகன விலை உயர்வுக்கு வழிவகை...?

Published on 31/08/2018 | Edited on 31/08/2018

 

vehicle

 

 

 

மோட்டார் வாகன சட்டப்படி மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் நாளை முதல் விற்பனையாகும் வாகனங்களுக்கு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்பளித்திருந்தது. இந்நிலையில் இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி ஆணையம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது. அந்த அறிக்கையில்,

 

நாளைமுதல் வாங்கப்படும் வாகனங்களுக்கு நீண்ட கால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டாயமாகிறது. கார்களை பொறுத்தவரை மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் மூன்று ஆண்டுகளாகவும், இருசக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளாகவும் இருக்கும். இதை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்படுத்தவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

 

 

மேலும் அந்த அறிக்கையில் கட்டண விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 1,000 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.5,286 ஆகும். 1,000 முதல் 1,500 சி.சி. வரையிலான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு தொகை ரூ.9,534 என்றும், 1,500 சி.சி.க்கும் அதிகமான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.24,305 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

 

அதேபோல் என்ஜின் திறன் 75 சி.சி.க்கு குறைவாக இருக்கும் இருசக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.1,045 ஆகும். 75 முதல் 150 சி.சி. வரையிலான என்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.3,285 ஆகவும், 150 முதல் 350 சி.சி. வரையிலான என்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.5,453 ஆகவும், 350 சி.சி.க்கும் அதிகமான என்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.13,034 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

 

இந்த மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டத்தினால் வாகனங்களின் விலை உயரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்