டெல்லியில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வருகை. ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், சி.பி,ஐ அதிகாரிகள் நடவடிக்கை. இருப்பினும் ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால் சிபிஐ அதிகாரிகள் திரும்பி சென்றனர். கடந்த 2007ம் ஆண்டு, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
இந்த விவகாரத்தில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில், முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, விசாரணைகளுக்கு ப.சிதம்பரம் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும் ப.சிதம்பரம் தரப்பிற்கு இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய 3 நாட்கள் அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமின் மறுக்கப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.