தமிழ்நாடு அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது; மசோதாக்களைக் கிடப்பில் போடுவது; அரசின் முக்கிய முடிவுகளில் தன்னிச்சையாகச் செயல்படுவது; அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய நிலையில் அந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது போன்ற செயல்கள் மூலம் ஆளுநர், அரசின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த முயல்வதாகத் தமிழ்நாடு அரசின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
அதனைத் தொடர்ந்து, தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என்று ஆளுங்கட்சி தரப்பில் இருந்தும், கூட்டணிக் கட்சி தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு 19 பக்க கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் மதிமுக சார்பில் ஆளுநரை நீக்குவது குறித்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி தொடங்கிய இந்த கையெழுத்து இயக்கத்தில், மாநிலம் முழுவதும் உள்ள எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டன. இந்த ஆவணங்களைப் பெட்டிகளில் வைத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்க கொண்டு வந்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைகோ, “தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சட்ட விதிகளுக்கு முரணாகவும், அரசியல் உள்நோக்கத்துடனும், தமிழ்நாடு அரசுக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதால் அவரைத் திரும்பப் பெற வேண்டும். இதில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 35 சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என 50 லட்சம் பேரிடம் கையெழுத்தைப் பெற்றிருக்கிறோம். இது தொடர்பான ஆவணங்களை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் நேரில் ஒப்படைக்க சில தினங்களாக அனுமதி கேட்டபோது அது நிராகரிக்கப்பட்டது என்று எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிய வந்தது. இருப்பினும், எப்போது அனுமதி வழங்கினாலும் 50 லட்சம் பிரதிநிதிகளின் கையெழுத்து படிவங்களை நேரில் சென்று ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைக்கத் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, ஜனாதிபதி மாளிகையில் இருந்து வைகோவிற்கு நேற்று பிற்பகல் அனுமதி வழங்கப்பட்டதால், தமிழக ஆளுநரை நீக்குவது தொடர்பான 50 லட்சம் பிரதிநிதிகளின் கையெழுத்து அடங்கிய படிவங்களை ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைத்தார்.