அடிக்கடி விபத்துகள் நடைபெறும் உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரையிலான நான்கு வழிச் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். பொன்.கௌதம சிகாமணி வலியுறுத்தினார்.
உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரையிலான நான்கு வழிச் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. காரணம் இந்த வழிச்சாலை பணிகள் முழுமை பெறாததால் பல இடங்களில் இருவழிச் சாலைகளாக வாகன ஓட்டிகள் பயன்படுத்துகிறார்கள். ஆகையால் தான் விபத்துகள் அதிக அளவில் நடக்கின்றன. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் இந்த சாலைகளில் 712 பேர்கள் பலியாகி இருப்பது மிகவும் வேதனைக்குரியது.
2017 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடந்த விபத்தில் 100 பேர்கள் இறந்துள்ளார்கள் என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. சேலம் - உளுந்தூர்பேட்டை 4 வழிச்சாலைப் பணி ஜூலை 2008 ஆம் ஆண்டு தொடங்கி செப்- 2013 ஆம் ஆண்டு முடிந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரையில் இப்பணி முடியவில்லை. இந்த சாலையை ஒட்டி 8 பெருநகரங்களின் சாலைகள் இணைப்புச் சாலையாக உள்ளன.
ஆத்தூர், வாழப்பாடி, உடையார் பட்டி , சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர் கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய நகரங்கள் உள்ளன . இங்குள்ள சாலைகள் இருவழிச்சாலைகளாக பயன்படுத்துவதால் விபத்துகள் அதிகம் நடைபெறுகின்றன. உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரையில் நிறைய கல்லூரிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. எனவே உடனடியாக இந்தச் சாலைப் பணிகளை துரிதப்படுத்தி நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும் என சம்மந்தப்பட்ட அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன் என கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். பொன். கௌதம சிகாமணி மக்களவையில் உரையாற்றினார்.