Skip to main content

ஹரியானாவின் முன்னாள் முதல்வர் காலமானார்!

Published on 20/12/2024 | Edited on 20/12/2024
Former Chief Minister of Haryana passed away

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார். அவருக்கு வயது 89. இவர் முன்னாள் துணைப் பிரதமர் சௌதாரி தேவி லாலின் மகன் ஆவார். ஓம் பிரகாஷ் சௌதாலா 4 முறை ஹரியானாவின் முதலமைச்சர் பதவி வகித்தவர். அதாவது கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை என 4 முறை முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார். ஹரியான மாநிலம் கூர்கானில் இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிர் பிரிந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. இவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தனது எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், “ஐ.என்.எல்.டி. தலைவரும், ஹரியானா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலாவிமறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருக்கு எனது பணிவான அஞ்சலி. அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஹரியானா மாநிலத்திற்கும் இந்த சமூகத்திற்கும் சேவையாற்றினார் அவரது மறைவு இந்தியாவிற்கும், ஹரியானா மாநில அரசியலுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், “ஹரியானா மாநில முன்னாள் முதல்வரும், மூத்த அரசியல் தலைவருமான சவுத்ரி ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மறைவு செய்தி வருத்தமளிக்கிறது. அவர் ஹரியானா மற்றும் நாட்டிற்கான சேவையில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்தார். இந்த துயர நேரத்தில், எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்