திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு சமுதாய நல மையத்தில் ரூ.50லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வக கட்டிடம் மற்றும் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் பாஸ்கரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, துணைச் செயலாளர் மார்கிரேட் மேரி, ஒன்றிய செயலாளர் பாறைப்பட்டி ராமன், பிள்ளையார் நத்தம் முருகேசன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ரா.செல்வகுமார் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் ஆய்வக கட்டிடம் மற்றும் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்துவிட்டு பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தி.மு.க. ஆட்சியின்போது கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி சித்தையன்கோட்டை மற்றும் சின்னாளபட்டியில் 30 படுக்கைகளுடன் கூடிய நவீன சிகிச்சை அரங்கம் திறந்து வைக்கப்பட்டது. அதன்பின்பு அதிமுக ஆட்சியில் எந்த ஒரு நலத்திட்டமும் இந்த மருத்துவமனையில் செயல்படுத்தவில்லை. ஆத்தூர் தொகுதியில் குறிப்பாக கைத்தறி நெசவாளர்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த அரசு சமுதாய நல மையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து சிகிச்சை மையம் அமைக்க இடங்களை தேர்வு செய்து வருகிறோம். இதுபோல திண்டுக்கல் - செம்பட்டி சாலையில் தொழிலாளர் நல மருத்துவமனையும் (இ.எஸ்.ஐ.) அமைய உள்ளது. மக்களுக்கான ஆட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
சொல்வதைதான் செய்வோம் என்பதை போல ஒவ்வொரு திட்டத்தையும் அறிவித்து அதை நூறு சதவிகிதம் நிறைவேற்றும் முதல்வராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர், தனி மனிதனுக்கு மருத்துவம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் சின்னாளப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆய்வகம் மற்றும் அலுவலகம் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கும் அவசர சிகிச்சைப் பிரிவு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவருக்கு நாம் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். இதுதவிர சின்னாளபட்டியில் உள்ள சாயத் தொழிலாளர்கள் மற்றும் சுங்குடி சேலை உற்பத்தியாளர் நலன் கருதி நவீன வசதிகளுடன் கூடிய சாயப் பட்டறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடத்தை தேர்வு செய்தபோது எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றம் சென்று தடுத்துவிட்டார்கள். விரைவில் நவீன வசதிகளுடன் கூடிய சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைவது உறுதி.
இங்குள்ள மருத்துவமனையை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் கோரிக்கை விடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு 24 மணிநேரமும் மருத்துவ சேவை தொடங்கும்” என்று கூறினார்.
நிகழ்ச்சியில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி முருகேசன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் இரா.சக்திவேல், ஆத்தூர் வட்டாட்சியர் முத்துமுருகன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் தனுஷ்கோடி, சின்னாளப்பட்டி பேரூராட்சித் தலைவர் இரா.பிரதீபா, பேரூராட்சி துணைத்தலைவர் பா.ஆனந்தி, சின்னாளபட்டி பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.