![Depression developing in the Bay of Bengal tomorrow ... Meteorological Center announcement](http://image.nakkheeran.in/cdn/farfuture/denOnrfSyrj4JUIbN59XDyIwgFl8bZxEv4HpC4gO_ds/1625809780/sites/default/files/inline-images/WEA1.jpg)
வங்கக் கடலில் நாளை மறுநாள் (11.07.2021) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய மேற்கு - வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஒடிசா - ஆந்திரா பகுதியில் உருவாகும் தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கலையநல்லூரில் 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி, சூளாங்குறிச்சி, எறையூரில் தலா 13 சென்டி மீட்டர் மழையும், ஆரணி மரக்காணத்தில் 11 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஏற்கனவே சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் விடிய விடிய கனமழை பொழிந்தது. தற்போது வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்துவரும் நிலையில், நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.