மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், நேற்று (26.01.2021) ட்ராக்டர் பேரணியை நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. டெல்லி செங்கோட்டையில் சீக்கியர்களின் புனிதக் கொடி ஏற்றப்பட்டது.
இந்நிலையில் விவசாயப் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
வினீத் ஜிண்டால் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில், "சுதந்திரமான ஆணையம் ஒன்றை அமைத்து, டெல்லியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரித்து, சட்டம் ஒழுங்கு சீர்குலைவிற்கும், பொது சொத்திற்கு சேதம் ஏற்பட காரணமாகவும், தேசிய அவமானத்திற்கு காரணமாகவும் விளங்கிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எனது மனுவை உச்சநீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.