காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பாரத பிரதமருமான மன்மோகன் சிங் ஐந்து முறை ராஜ்ய சபா எம்.பி.யாக பதவி வகித்தார். இந்த ஐந்து முறையும் அசாம் மாநிலத்தில் இருந்தே மேல் சபை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடைசியாக இவரது ராஜ்ய சபா எம்.பியின் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 14- ஆம் தேதி முடிவடைந்தது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால், காங்கிரஸ் கட்சி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மீண்டும் ராஜ்ய சபா உறுப்பினராக்க முடியாமல் போனது. மேலும் அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானில் பாஜக கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்ய சபா எம்.பியுமான மதன் லால் சைனி ஜூன் 24- ஆம் தேதி காலமானார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மாநிலங்களவை இடம் காலியானதாகவும், இதற்கான தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் ஆகஸ்ட் 7 ஆம் தேதி என்றும், வேட்பு மனுவை தாக்கல் செய்ய ஆகஸ்ட் 14- ஆம் தேதி கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 16- ஆம் தேதி வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெறும் என்றும், வேட்பு மனுவை வாபஸ் பெற ஆகஸ்ட் 19- ஆம் தேதி கடைசி நாள் என குறிப்பிட்டுள்ளது. அதே போல் ஆகஸ்ட்- 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. அம்மாநில முதல்வராக அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக சச்சின் பைலட் பதவி வகித்து வருகின்றனர். இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை தேர்தலில் நிறுத்தி மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்ப காங்கிரஸ் கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அந்த மாநிலத்தில் பாஜக கட்சிக்கு குறைவான எம்.எல்.ஏக்களே உள்ளதால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்ய சபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.