கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி தலைமையிலான அரசு ஆட்சி ஆட்சியமைத்தது. இதனைத் தொடர்ந்து பகவந்த் மான் பஞ்சாபின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று 89 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் களத்தில் காங்கிரஸ், பாஜக, மற்றும் ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகள் களத்தில் இருப்பதால், குஜராத் தேர்தல் களம் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.
இதனையொட்டி தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குஜராத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில், நூறு நாள் வேலை திட்டத்தில் குறைந்தபட்ச கூலியை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் சங்ரூரில் உள்ள முதல்வர் பகவந்த் மான் வீட்டின் முன்பு நேற்று நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படவே, போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர். இந்தப் போராட்டத்தை வேண்டும் என்றே பாஜக திட்டமிட்டு தூண்டி விட்டதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.