கடந்த 19 ராமநாதபுரம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில், அன்று மாலையே மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது தொடர்பான செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் கண்டித்து ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.
கடந்த 26 ஆம் தேதி கோயம்பேட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ''12 நாட்டிக்கல் மைல் அதற்குப் பிறகு ஸ்டேட், அதனையடுத்து பொருளாதார எல்லை, அதனைத்தாண்டி சர்வதேச எல்லை. 200 கிலோமீட்டர் இருக்கக்கூடிய சர்வதேச எல்லை 20 கிலோ மீட்டரில் வருவதால் தொடர்ந்து பிரச்சனைகள் வருகிறது. நிச்சயமாக வருகின்ற காலத்தில் ஜாயின் கமிட்டி மூலமாக மீனவர்கள் கைது செய்வதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் சிறையிலுள்ள 43 தமிழக மீனவர்களின் காவலை வரும் ஜனவரி 13 ஆம் தேதி வரை நீடித்து இலங்கையின் ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.