மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை குறைந்துள்ளது. அது அதன் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது என கூறி 66 முன்னாள் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் குடியரசு தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அதில், "எத்தனையோ பெரிய சவால்களையும், சிக்கல்களையும் சந்தித்த தேர்தல் ஆணையம் இவ்வளவு காலம் தேர்தல்களை கவுரவமாக நடத்தி கொண்டிருந்தது. ஆனால் இன்று தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம், நியாயம், பாரபட்சமின்மை, மற்றும் திறமை ஆகியவை சமரசம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நேர்மையாக நடக்கும் தேர்தல் நடைமுறைக்கு அபாயம் விளைந்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் இந்த கடிதத்தில் முன்னாள் வெளியுறவு செயலர் ஷிவ்சங்கர் மேனன், முன்னாள் திட்ட கமிஷன் செயலர் என்.சி.சக்சேனா, பாஜக வின் ஆதரவாளராக அறியப்பட்ட டெல்லியின் முன்னாள் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் உட்பட பல முக்கிய பொறுப்புகளில் இருந்த 66 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.